திங்கள், 26 செப்டம்பர், 2016

அழகு

ஆடையில்லா பெண்டிர்
அரை அழகு.

செவ்வாய், 17 மே, 2016

பிறப்பின் பயன்?

பிறப்பின் பயன் யாதென்றான்,
தனக்குப்பின் ஓருயிரை
விட்டுச் செல்வதென்றான்.

பிறப்பின் பயன் யாதென்றான்,
மனிதகுலம் வாழ
நல்லுலகை உண்டாக்குவதென்றான்.

பிறப்பின் பயன் யாதென்றான்,
இறைவன் புகழ்பாடி
மறுபிறப்பை அறுப்பதென்றான்.

பிறப்பின் பயன் யாதென்றான்,
கவலையின்றி கூத்தாடிக்
களித்துக் கிடப்பதென்றான்.

பிறப்பின் பயன் யாதென்றான்,
தேவையற்ற கேள்வி
இதுவென்றான்.

பிறப்பின் பயன் யாதென்றான்,
இக்கேள்விக்கு
விடைதேடுவது தானென்றான்.

இவையனைத்திற்கும்
மெல்லிய புன்னகையுடன் கடந்து சென்றான்
பிறப்பின் பயன் யாதென்ற
இன்னுமொரு புத்தன்.

புதன், 20 ஜனவரி, 2016

நடை பழகு
ஓட்டம் எடு
எம்மொழி பேசு
இச்சாமி கும்பிடு
கல்வி பயில்
காதல் கொள்
நண்பர்கள் பெருக்கு
பணி செய்
மணம் முடி
மக்கள் ஈன்
உறவுகளுக்கு உழை
ஊரோடு ஒத்துப்போ
நோய்வாய்ப்படு
செத்து மடி.

எவனோ போட்ட கோடு
வழுவாமல் வாழு
உன்னிச்சைப்படி நடந்தால்
ஊர் ஏசும்
உன் வாழ்க்கையை
வாழென்று மட்டும்
கூசாமல் பேசும்.

வியாழன், 7 ஜனவரி, 2016

சாபம்

'முட்டை கண்ணு',
'போண்டா மூக்கு',
'ஒல்லிக்குச்சி',
'கோண மூஞ்சி',
- எதுவும் இன்றில்லை
இரசித்தவளும் இன்றில்லை.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

கடவுள் பேசுகிறேன்

இதோ நான்!
கேள்?
என்னிடம் கேட்க
ஆயிரம் இருக்கும் உனக்கு.
கேள்!

கைகூடாத காதல்,
கைதவறிய செல்வம்,
சன்னலோர இருக்கை,
சூடான சோறு - என்று
ஆயிரம் இருக்கும் உனக்கு.
கேள்!

ஓ! நானா?
நான் தான்.
இந்த அற்புதத்தின் சூத்திரதாரி.
சமன்பாடுகளுக்கும் சமயங்களுக்கும்
அப்பாற்பட்ட சகலமானவன்.

பொறு.

எனக்கு உன்னிடம் கேட்கவென்று
ஒன்றுண்டு.
உனக்கு நான்
'வெறுங்கல்', 'வெற்றுக்கற்பனை',
'விஞ்ஞானத் தேடல்',
'மெய்ஞான எல்லை' - என ஏதோவொன்று.

எனக்கு நீ யார்?

'உயிர்களின் உச்சமா!'

ஊரும் பாம்பு,
உயிர்கொல்லும் கிருமி,
நாறும் மலர்,
நெடுதுயர்ந்த மரம்
இவற்றைவிட நீ என்ன மேலானவன்?

காலமும் திசையும்
எல்லையுமற்ற
எனது பிரபஞ்சத்தின்
பிருமாண்டம் நீ அறிவாயா?

அதில்
எத்தனை எத்தனை
உலகங்கள் உண்டென்று அறிவாயா?
நீ காணும் உலகில்தான்
எத்தனை எத்தனை
உயிர்கள் என்றறிவாயா?

இதோ!
இதே நொடியில்
கோடி ஆண்டுகள் வாழ்ந்த
ஓரினத்தின் கடைசி உயிர் அழிகிறது.
கோடி ஆண்டுகள் வாழப்போகும்
ஓரினம் உருவாகிறது.

நீ யார்?

என் நீள் மயிற் கற்றையின்
ஒற்றை நுனியே உன்னுலகம்.
எனில் நீ யார்?
என் பேரண்டத்தின்
ஓரணுவே உன்னலுகம்.
எனில் நீ யார்?

மதியூக மனிதனே!

கேள்?
பிள்ளையின் திருமணம்,
பினியினின்று விடுதலை,
உன் நாயின் நலம் - என்று
ஆயிரம் இருக்கும் உனக்கு.
கேள்!