திங்கள், 22 செப்டம்பர், 2008

காணமல் போன ரோடு.!!

MC பற்றி எழுத எத்தனித்தால் ஒரு தனி வலைப்பூவே எழுதலாம். அவரது சாகசங்கள் ஏராளம். அந்த சாகச மகுடத்தில் மாணிக்கமாய் மின்னும், எங்கள் மனதில் இன்று வரை பசுமையாய் இருக்கும், ஒரு சம்பவம் எங்கள் தொழிற்பயிற்சி படிப்பின் இரண்டாம் ஆண்டு நிகழ்ந்தது. இதில் மற்றொரு நாயகன் NV.

ஒரு மனம் மயங்கும் மாலை நேரத்தில், MC & NV இருவரும் பிறந்தநாள் களியாட்டத்திற்காக பெருந்துறை சென்றனர். விருந்து என்றாலே சரக்கு இருக்க வேண்டும் என்ற மரபிற்கேற்ப, அவர்களும் சரக்கில் மூழ்கித் திளைத்தனர். இருவருமே கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்தனர். பெருந்துறைக்கும் கல்லூரிக்கும் சுமார் 5 கி.மீ. தொலைவு. விருந்து முடிந்தபின் விடுதிக்கு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தனர். கல்லூரி வரும் பாதையில் தெருவிளக்கு வசதி எல்லாம் கிடையாது. அந்த சுஸுகி பைக் பல்பு வெளிச்சத்தை நம்பி வண்டியை செலுத்திக் கொண்டுவந்தார் நம்ம MC.

தோப்புப்பாளையம் நிறுத்தத்திற்கு முன்னால் ஒரு குருட்டுத் திருப்பம் (blind curve) உள்ளது. ஆனால் மதுவின் மயக்கத்தில் இருந்த MC யின் கண்களுக்கு அது புலப்படாததால், வளைவில் திரும்பாமல் நேராக விரைந்தது வண்டி.!

இந்த பீதியினால் போதை தெளிந்த, பின்னால் இருந்த, NV யிடம் இருந்து "டேய் MC!!! ரோட்ட காணம்டா!!! ரோட்ட காணம்டா!!!" என்று அபாயக் குரல் ஒலித்தது.

"எங்க டா? எங்க டா?" என்று MC ரோட்டைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் சாலையில் இருந்து தடம்புரண்டு நேராக tarpit-ஐ நோக்கி சீறியது வண்டி.

நல்லவேளையாக, அதை தவிர்த்து முற்செடிகளுக்குள் விழுந்து, புரண்டு, எழுந்து உயிர் பிழைத்தனர் இருவரும். இந்த கோர விபத்தில் தன் ஒரு பக்க முகப்பொலிவை இழந்து தெய்வமகன் சிவாஜி போல் ஆகிவிட்டார் MC.

பின்குறிப்பு: அதே MC, அதே வண்டியில், அதே சரக்கின் போதையில், அதே இடத்தில் மீண்டும் ஒரு முறை விழுந்தார். காரணம்: சாலையில் தேங்கியிருந்த மழைநீர் அவரது புது bells pant இல் அடித்துவிடாமல் இருக்க கால்களை தூக்கிய போது, அந்த bells pant கைக்கம்பியின் (Handle Bar) இருபக்கமும் மாட்டிக்கொண்டது. வேறு வழியின்றி crash landing செய்யவேண்டியதாயிற்று.

கருத்துகள் இல்லை: