திங்கள், 29 டிசம்பர், 2008

கதையும் காரணமும் - 5

ஒரு ஊரில் கொத்தாள் ஒருவன் வசித்து வந்தான். அவனது தொழில் குன்றுகளையும் மலைகளையும் குடைந்து சலவைக் கற்களையும் இன்ன பிற கற்களையும் வெட்டுவது. அவனுக்கு அவன் செய்யும் தொழிலும், வாழ்க்கையும் பிடிக்கவில்லை. விதியே என்று வாழ்ந்து வந்தான். ஒரு நாள் "நீ என்னவாக ஆசைப்படுகிறாயோ அதுவாக ஆவாய்" என்று அவனுக்கு ஒரு அசரீரி கேட்டது. உடனே அவன் அந்த நாட்டு அரசனாக ஆக வேண்டும் என்றான். உடனே அரசனானான். மிக்க மகிழ்ச்சியுடன் சில நாட்கள் இருந்தான். ஒரு நாள் வெளியில் செல்ல நினைக்கையில் பலத்த மழை பெய்து அவனது அன்றைய திட்டத்தைக் கைவிட நேர்ந்தது. மன்னனையே வெற்றிகொண்ட மழையாக மாற வேண்டும் என்று நினைத்து அவ்வாறே உருவெடுத்தான். காடு, நாடு என அவன் விருப்பப்படி கொட்டித் தீர்த்தான்.

பலத்த காற்று அடிக்கவே, மேகம் கலைந்து வலுவிழந்தான். உடனே காற்றாக உருவெடுத்தான். சூறாவளியாக மரங்கள் வீடுகள் என அடித்து துவம்சம் செய்த அவனால் மலையை மட்டும் அசைக்க முடியவில்லை. உடனே மலையாக மாறி கம்பீரமாக நின்றான். மழையும் காற்றும் அசைக்க முடியாத அவனை ஒரு சிறு உளி கொண்டு ஒருவன் வெட்டி கொண்டிருப்பதைக் கண்டு, கொத்தாளாக வேண்டும் என்று நினைத்தான். அவன் விருப்பபடியே மீண்டும் பழையபடி கொத்தாளகவே ஆனான்.

கருத்துகள் இல்லை: