ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

அப்பாலஜி..!!!

"Apology Letter" - கல்லூரி வாழ்கையில் இந்த வஸ்த்துவை கடந்து வராதவர்கள் பெரும்பாலும் இருக்க முடியாது. நாம் எழுதவில்லை என்றாலும் விதிகளை மீறும் சக தோழர்கள் எழுதுவதை நிச்சயம் கண்டிருப்போம். டிப்ளோமா, பொறியியல் என்று இரு மூன்று வருட கல்லூரி வாழ்க்கையில் பல அப்பாலஜி எழுதி இருக்கிறேன். ஒரு முறைகூட எனக்காக எழுதவில்லை எல்லாம் நம் நண்பர்களுக்காகத் தான்.

ஆனால் இந்த இறுமாப்பிற்கு என் கல்லூரி வாழ்வின் இறுதி நாளில் இறுதி சடங்கு செய்யவேண்டியதாகிற்று. கடைசி வருட கடைசி பரீச்சையன்று அலைபேசியில் அலவளாவிக் கொண்டிருந்தேன். கல்லூரி வளாகத்திற்குள் அலைப்பேசி அனுமதி மறுப்பு அமலுக்கு வந்திருந்த காலம் அது. எங்கள் டிப்பார்ட்மன்ட் கட்டடத்திற்குள் பொதுவாக விரிவுரையாளர்கள் யாரும் வரமாட்டார்கள். அந்த தைரியத்தில் நான் பேசிக் கொண்டிருந்த வேளையில், கொஞ்ச தூரத்தில் நின்று ஒருவர் என்னை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செமஸ்டர் பரீச்சையையே சட்டை செய்யவில்லை, முன் பின் தெரியாத ஒருவரையா சட்டை செய்யப் போகிறோம்.

வேகமாக என்னிடம் வந்தவர் "காலேஜுக்குள்ள போன் பேசறதே தப்பு. ப்ரின்சிப்பால் என் முன்னாடியே போன் பேசறயா?" என்று கர்ஜித்தார்.

"சாரி சார் தெரியாம பேசிட்டேன்"- இது நான்.

"காலேஜ்க்குள்ள போன் பேசக்கூடாதுனு தெரியாது? "

"தெரியும் சார் ஆனா நீங்க தான் ப்ரின்சிப்பால்னு தெரியாம பேசிட்டேன்". இதைக் கேட்டதும் உக்கிரத்தின் உச்சிக்கே சென்றவர் அதன் விளைவாக அலைபேசியை ஜப்தி செய்து சென்றுவிட்டார்.

பிறகு பரீச்சையை முடித்துக் கொண்டு அவர் முன் சென்று நின்றேன். மற்றொரு சுற்று திட்டிவிட்டு அப்பாலஜி எழுதி வாங்கிக் கொண்டு போனைத் திரும்பத் தந்தார். எனக்கு அது கூட வருத்தமில்லை. கல்லூரிப் படிப்பே முடிந்து விட்ட கடைசி நாளில் அப்பாலஜி எழுத சொன்ன அவரது அபார புத்திக் கூர்மை தான் என்னை இப்போதும் வியக்கவைக்கிறது.

கருத்துகள் இல்லை: