வெள்ளி, 25 செப்டம்பர், 2009

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரு பேராசிரியர், தன்னிடம் கல்வி பயின்ற பழைய மாணவர்களை மீண்டும் சந்திக்க விரும்பி ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். அவரது அழைப்பை ஏற்று ஒரு இனிய மாலை வேளையில் அனைவரும் கூடினர். சில வருடங்களுக்குப் பின் சக தோழர்களை சந்திக்க நேர்ந்ததில் அளவில்லாத மகிழ்ச்சி கொண்டு ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு பழைய பசுமை நினைவுகளை அசை போடத் தொடங்கினர். சிறிது நேரத்தில் அவர்கள் பேச்சில் தங்கள் வேலைகளைப் பற்றியும் அதன் சுமைகள் பற்றியும் அதனால் வாழ்க்கை உற்சாகமின்றி போனது பற்றியும் புகார் சொல்லத் துவங்கிவிட்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் "வாருங்கள் அனைவரும் தேநீர் அருந்தலாம்" என்று பேராசிரியர் அவர்களை பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மேசையின் மேல் ஒரு பெரிய பிளாஸ்கில் தேநீரும், அதனருகில் பிளாஸ்டிக், காண்ணாடி, எவர் சில்வர், சில விலையுயர்ந்த, சில சாதாரன என்று பல தரப்பட்ட கோப்பைகளும் வைக்கப்பட்டிருந்தன.

ஆளுக்கொரு கோப்பையில் தேநீர் எடுத்துக் கொண்டு பேராசிரியரை சுற்றி அமர்ந்தனர். பேராசிரியர் கூறினார் "அனைவரின் கைகளிலும் விலையுயர்ந்த, அழகான கோப்பைகள் தான் இருக்கின்றன. சாதாரன கோப்பைகளை யாரும் தொடவே இல்லை. இதுதான் உங்கள் வாழ்க்கையின் உற்சாகமின்மைக்குக் காரணம். உங்களது தேவை தேநீர் தான். அதைத்தான் நீங்கள் பருகப் போகிறீர்கள். கோப்பைகளை அல்ல. இருந்தாலும் அடுத்தவரை விட சிறந்ததையே ஆசைப்படுகின்றீர்கள். உங்கள் சம்பளம், வேலை, அந்தஸ்து இவை எல்லாம் கோப்பைகள் போன்றவை. வாழ்க்கை தேநீர் போன்றது. எந்த கோப்பையில் இருந்தாலும் அதன் தரமும் ருசியும் ஒன்றுதான். சில சமயம் கோப்பையைப் பொறுக்குவதிலேயே கவனம் செலுத்திவிட்டு உள்ளிருக்கும் தேநீரை சுவைக்க தவறவிட்டு விடுகின்றோம்". அவர் கூறியதன் பொருள் புரிந்து அனைவரும் தலை அசைத்தனர்.

கருத்துகள் இல்லை: