ஞாயிறு, 21 மார்ச், 2010

கழுதை? எருமை? குதிரை?

இன்றும் அவன் முயற்சியில் தோல்வி அடைந்த ராமு தன் ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தான். இருட்டிவிட்டபடியால் அருகில் தெரிந்த ஒரு பழைய மண்டபத்தில் அன்றிரவை கழிக்க முடிவு செய்து அதை அடைந்தான். அங்கே சந்நியாசி ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். தூக்கம் வரும் வரை கொஞ்சம் பேசலாமே என்று பேச்சுக் கொடுத்தான் ராமு. அவன் பேசுவதிலிருந்து அவன் விரக்தியை புரிந்து கொண்ட சந்நியாசி, "ஏனப்பா இவ்வளவு சிறு வயதில் இவ்வளவு வெறுப்புடன் பேசுகிறாய்?" என்று கேட்டார்.
"என்ன சாமி செய்வது? எதை தொட்டாலும் தோல்வியில் முடிகிறது. ஊராரின் இழி பேச்சுக்கு ஆளாக நேரிடிகிறது. என்ன வாழ்க்கையோ! தங்களைப் பார்த்தால் ஞானி போல் தெரிகிறது, எனக்கு ஒரு வழி சொலுங்களேன்?" என்றான் ராமு.
"உனக்கு கழுதையாக இருக்க விருப்பமா? அல்லது எருமையாகவா? அல்லது குதிரையாகவா?" என்று கேட்டார் சந்நியாசி.
"தாங்கள் கேட்பது எனக்கு ஒன்றும் புரியவில்லை ஐயா" என்றான் ராமு.
"ஒரு கழுதையை அடித்தால் அது என்ன செய்யும்?"
"பின்னங்காலால் எட்டி உதைக்கும்"
"ஒரு  எருமையை அடித்தால்?"
"பேசாமல் எதுவும் செய்யாமல் நிற்கும்"
"ஒரு குதிரையை அடித்தால்?"
"சீறிக் கொண்டு முன்னாள் பாய்ந்து செல்லும்"
"உனக்கு வரும் அவமானங்களும் ஏளனப்பேச்சும் அந்த அடிபோல தான். நீ கழுதையாகவோ, எருமையாகவோ, குதிரையாகவோ இருப்பது உன் விருப்பம்" என்றார் அவர்.
புது நம்பிக்கையுடன் அன்றிரவு நிம்மதியாக உறங்கினான் ராமு.

கருத்துகள் இல்லை: