வியாழன், 22 ஏப்ரல், 2010

இது காதல் கவிதையல்ல!

கடவுளே.!
வாழ்க்கை சாபத்தை அளித்த வள்ளலே!
எங்கையா இருக்கிறீர் நீர்?

என்னை படைத்ததில் உனக்கு ஏன் இத்தனை வெறுப்பு?
எதற்காக அளித்தாய் இந்த கேடுகெட்ட பிறப்பு?
கொடுந்துயரிலும் உன் பேர் கூவியதில்லை 
கொடுத்துச் சீரழிந்த துயரினில் கூவுகிறேன்.

வாரிக் கொடுத்த துன்பத்தில் 
இது தான் கடைசி கட்டமா?
இல்லை என் வாழ்க்கை தெப்பத்தை
கண்ணீரிலேயே மிதக்க வைப்பதாய் திட்டமா?  


வெற்றுக் காகிதமாய் கிடந்தேன் 
உலகின் ஒரு மூலையில்
விரும்பி வந்து அவள் பெயர் எழுதினாள்
கவிதை எழுதினாள்
கண்ணீரும் துடைத்தாள்
இன்று கசக்கி எறிந்துவிட்டாள் தூரத்தில்.

காரியம் முடிந்ததும் தூக்கியெறிய நான் என்ன
கந்தல் துனியா இல்லை
காய்ந்த மலரா?
வெறுப்பு காட்டி என்னை விலக்க
அவசியம் என்ன? விளக்கு.

அழகான குழந்தையாய் பாவித்தேன் 
இயற்கை இச்சைகளுக்கு அணைவைத்தேன்
கொஞ்சிப் பேசும் மழலைப் பேச்சை ரசித்தேன்
விடாமல் சிரிக்கும் 
வெண்சிரிப்பை ரசித்தேன்.

இவ்வளவு என்றில்லாமல் 
அவ்வளவு அன்பையும் வைத்தேன் 
ஒட்டுமொத்த உலகின் பாசத்தையும் கொட்டினேன்.

தீயாய்க் கொட்டிய வார்த்தைகளைப் 
பேசப் பழகும் பிள்ளை பேச்சாய் ரசித்தேன்
நான் துரும்பாய் போட்ட வார்த்தை 
தூள் தூளாக்கியதாம் அவள் மனதிலிருந்த 
என் பிம்பத்தை.

நெஞ்சை உரித்துக் காட்டச் சொல்லியிருந்தால் 
நொடியில் செய்திருப்பேன் 
பிஞ்சுக் கையால் 
என் குழந்தை கிள்ளிய வலி 
அம்மம்மா....
அதைத் தாங்கும் வலி எனக்கில்லை.

சோகத்தை சொல்ல வார்த்தையில்லை 
சாய்ந்து அழ அவள் மடியில்லை 
பொன் சிலையாய் போற்றிய உன்னை வெறும்
மண் பொம்மையாய் நினைப்பேனா?
அடி என் பேதைக் கிளியே 
தவறாய் புரிந்து கொள்ளலுக்கும் ஒரு தர்மமில்லையா?

நீ போன அந்த நொடியிலேயே 
தடுக்கி விழுந்து கிடக்கிறது என் வாழ்க்கை.
இதன் பாதிப்பு சிறிதுமின்றி 
தடையில்லாமல் தொடர்கிறது  உன் வாழ்க்கை.
கொடூரமான உண்மையம்மா இது.

உறவு முறியும் போது சத்தமில்லை.
கொஞ்சம் நின்று கேள்
என் விசும்பல் கேட்கும்.

போதுமம்மா உங்கள் உறவு 
பெண்களின் பிறப்பு குணமா இது?
திராட்சை தேடிய நரியின் கதையல்ல இது.
சூடு கண்ட பூனையின் கதறல்.

இப்பவும் வேதனையில்லை எனக்கு 
உன்னை வதைக்கும் எண்ணமுமில்லை
என் கண்ணைக் குத்தி 
எக்கண்ணில் ரசிப்பேன்?

உண்மை என் அன்பென்றால் 
உணரும் ஒரு நாள் அழைப்பாய்
அதுவரை 
கைவிரித்த கர்த்தராய் காத்திருப்பேன்
என் செல்லக் குழந்தைக்காக.
      

1 கருத்து:

asha சொன்னது…

avanga mela nee ivlo paasam vachuruka..adha avanga kandippa purinjukku vaanga.indha kavidhaiya padichavadhu avanga manasu maaru dhaanu paakalam