வியாழன், 18 அக்டோபர், 2012

நாகரிகம்

                செம்பரன், கலம்பா மரத்தின் மத்தியில் ஒரு கிளையின் மேல் அமர்ந்திருந்தான். மரத்தின் பிரமாண்ட தண்டில் தன் கரிமுதுகை சாய்த்திருந்த அவன் பார்வை ஆற்றோரத்திலேயே நிலைகுத்தி இருந்தது. அன்றைய நாளின் முதல் வெளிச்சத்திற்கு முன்பே இறை தேடி வந்திருந்தாலும் இதுவரை எந்தப் பலியின் மீதும் அவன் பார்வை படவில்லை. மனதில் நாட்டமுமில்லை. கடந்த பத்துப் பகல்களாக இதே நிலைதான். அவன் மனதின் ஓட்டத்தில் அருகிலிருந்த தெப்பில மரமே இருந்தது. மலந்தி, நொச்சியை தவிற தெப்பிலக்கு ஈடான மரங்கள் வேறு இருந்திருக்கவில்லை. அவன் மரமேறி வேட்டையாட பழகிய நாட்களில் அவன் அப்பன் சொன்னது நினைவில் ஆடியது. "செம்பரா.! பெரிய மரங்களின் அடியில் சிறு மரங்கள் பிழைக்காது. நீரையும் சத்தையும் முழுக்க உறுஞ்சிக் குடித்துவிடும். மட்டுமல்லாமல் வெளிச்சத்தையும் அடச்சிடும். ஆனால் தெப்பில மரத்தடியில் மட்டுந்தான் மட்ட மரங்கள் வளர ஏலும்". இவன் அனுபவத்தில் அது உண்மையென்றே அறிந்திருந்தான்.

                  அவன் சிந்தனையை அந்தச் சத்தம் கலைத்தது. முகிலை உரசிக்கொண்டிருந்த உச்சி மண்ணில் விழுந்த சத்தம். கூடவே பெரிய தடையை சாய்த்துவிட்ட ஆரவாரமும் மெலிதாகக் கேட்டது. யானையையே மறைக்கவல்ல தெப்பிலயின் அடித்தண்டை ஐந்து பேர் மூன்று பகல்களாக வெட்டிக் கொண்டிருந்தனர். மீண்டும் ஒன்று வீழ்ந்ததை எண்ணி பெருமூச்சிறைந்தான். இதற்கு மேலும் காத்துக்கிடக்க மனம் ஒப்பாமல் மரத்திலிருந்து இறங்கி நதிக்கரை நோக்கி நடந்தான். தான் நடக்கும் அதே பாதையில் என்றோ ஒருநாள் தன முன்னோர்களும் நடந்திருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டான். 

                   அவர்கள் மூதாதையர் மலைக்கடுகளைவிட்டு நதிக்கரை நோக்கி புலம்பெயர்ந்தது பற்றி அவன் அப்பனும் கூட்டக்கிழவர்களும் நிறையவே சொல்லியிருந்தார்கள். இந்த இடப்பெயர்ச்சியில் விருப்பமின்றி பின்தங்கிவிட்ட சிலரைப்பற்றியும் கேள்வியுற்றிருந்தான். அன்றிருந்த அவர்கள் மனப்போராட்டத்தை இன்று தன்னோடு பொருத்திப் பார்க்கமுடிந்தது அவனால். நீரில் தெரிந்த அவன் பிம்பம் யாரோ ஏற்படுத்திய சலசலப்பால் வட்ட அலைகளாக சிதைந்தது. நிமிர்ந்து பார்த்தான். சற்றுத்தள்ளி பனையோலைக் கூடையில் சிலர் நீர் எடுத்தும் எடுத்துச்சென்றும் கொண்டிருந்தனர். செம்மண்ணையும் களிமண்ணையும் குழைப்பதற்காக. குழைத்த மண்ணை, ஒரே வரிசையில் ஒன்றன்மேல் ஒன்றாக, மூன்று திசைகளையும் அடைத்து அடுக்கப்படிருந்த கற்களின் மேல் இருவர் பூசிக்கொண்டிருந்தனர். மரங்களையும் செடிகளையும் அழித்த இடங்களில் இதுபோல் சில கட்டடங்கள் முளைத்த வண்ணம் இருந்தன.

                     நீரிறைத்துக் கொண்டிருந்த கூட்டக்கிழவருள் ஒருவனான கவித்தன் இவன் அருகில் வந்தான்.

"என்ன செம்பரா? இன்னம் அதே நினப்பாய் இருக்கிறாயா?"

"இல்லை. இன்றும் பலி ஏதும் சிக்கவில்லை. அந்த வருத்தம்தான்."

"உதடு பொய் சொல்லலாம். முகம் சொல்லாது. சொல்? ஏன் இந்த வாட்டம்?

"நமக்கு உணவு தந்து, உயிர் தந்து, நீர் தந்து, நிழல் தந்து, அரணாய் இருந்து அன்னைபோல் காத்த இந்தக் காட்டை சிரைத்து குடில்கள் கட்டுவதை என் மனம் ஒப்பவில்லை."

"இது நம் தேவை செம்பரா. இப்பொழ் நாமிருக்கும் மரக்குடில்களைவிட இக்கற்கட்டடங்கள் பாதுகாப்பாய் இருக்கும். எச்சீற்றத்தில் இருந்தும் நம்மையும் நம்மக்களையும் காப்பாற்றும்."

"அப்பொழ் நாம் குகைகளுக்கே சென்றிடலாமே?!"

"இவையும் குகைதான். நம் வசதிப்பட்ட இடத்தில் நாமே எழுப்பிக்கொள்ளும் குகைகள்."

"எந்த வியாக்கியானமும் என்னை தணிக்க ஏலாது. நாளை வரும் மக்கள் இந்த அறியாமை அழிவைத் தொடரமாட்டர்கள் என்று நம்புகிறேன்."

"உறுதியில்லை. இந்தக் கற்குவியல்கள் பெரிதாகுமே அன்றி கைவிடப்படாது. புதியதில் இருக்கும் இச்சை பழகியதின் மேல் இருக்காது."

                    அவ்வாறானால் இந்தக்காடே அழிக்கப்படும். தெப்பிலயை போல பல மரங்கள் சாய்க்கப்படும் என்ற எண்ணமே அவன் நெஞ்சை அழுத்தியது. அந்தப் பாரம் தாங்காமல் தனியாக நடந்து நதிக்கரையின் சிறிய பாறை மீதமர்ந்தான். நீரில் ஓடும் மரங்கள் அவனைவிட்டுச் செல்வதாகவே உணர்ந்தான். இனிப்புத் துளிகளாய் ஓடிக்கொண்டிருந்த நதியில் ஒரு உப்புத் துளியும் கலந்தது.