திங்கள், 12 நவம்பர், 2012

எழுத்துலக சிகாமணிகள்

           அடுத்தவரின் படைப்புகளை விமர்சிக்குமளவு நான் அறிவாளி அல்லன். ஆனால் வாரஇதழ்களிலும் வலைப்பதிவுகளிலும் பயன்படுத்தப்படும் தமிழைப் படிக்கும்போது கோபம் கொப்பளிக்கிறது. சில புத்தகங்களிலும் இது தொடர்வது மிகுந்த வேதனை தருகிறது. உதாரணத்திற்கு எஸ்.ரா என்று சொல்லிக்கொள்ளும் எஸ். இராமகிருஷ்ணன். தனிமனித தாக்குதல் கூடாது என்றுதானிருந்தேன், ஆனால் காவல் கோட்டத்தை அவர் கடுமையாக விமர்சித்ததில் இருந்து இதை சொல்லவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தது. இன்று அதற்கான வேளை வந்துவிட்டது.

             காவல் கோட்டத்தை நான் படித்ததில்லை, ஆனால் எஸ்.ராவின் "துயில்" படித்திருக்கிறேன். காவல் கோட்டத்தை "ஆயிரம் பக்க அபத்தம்" என்று சொல்லியிருந்தார், அவரின் "துயில்" வெறும் வார்த்தைக் குப்பை என்று ஒருவரும் சொல்லவில்லை போலும். இதில் ஆயிரத்தெட்டு சந்திப்பிழை, வாக்கியப்பிழை, வார்த்தைப்பிழை வேறு. எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்பவர் இலக்கணப் பிழையின்றி எழுதுதல் வேண்டாமா? அதுவே அவரது "யாமம்" அருமையான படைப்பு. அவர்மட்டுமல்ல எழுதுபவர்களில் தொண்ணூறு விழுக்காடு அப்படித்தான் இருக்கிறார்கள்.

            அருகாமை - இதை அருகில் என்று பொருள்படும்படியாகத் தான் பலபேர் எழுதுகிறார்கள். இது தவறு என்று பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கே இன்னும் தெரியவில்லை.

          கொண்டாடுதல் - பதினைந்து வருடங்களுக்கு முன்பு இந்த வார்த்தை தமிழில் இருந்ததா என்று தெரியவில்லை. "Celebrate" என்பதின் நேரடி மொழிபெயர்ப்பு இது. இவர்கள் "Celebrity"-யை என்னவென்று சொல்வார்கள் என்று தெரியவில்லை.

           முதிர்ச்சி - "Maturity" என்பதின் தமிழாக்கம். இதற்கு சரியான தமிழ் சொல் "பக்குவம்" இன்றும் பேச்சு வழக்கில் இருக்கும் வார்த்தை. இதைவிட்டுவிட்டு முதிர்ச்சியை பிடித்துகொண்டு என் தொங்குகிறார்கள் என தெரியவில்லை.

              உடல் மொழி - தொல்காப்பியம் சொன்ன "மெய்ப்பா"ட்டை "Body Language" என்று வெளிநாட்டினர் கூவி விற்றால், கொஞ்சம் கூட உறுத்தல் இன்றி இப்படி கேவலாமாக மொழிமாற்றம் செய்தது எழுதிக்கொண்டிருக்கிறோம்.

           உயர்வெளிச்சத்துளிகள் - இந்த வார்த்தையைக் கண்டுபிடித்தவனைக் கண்டால் காலில் விழ வேண்டும். "முக்கியத் தருணங்கள்" என்ற நல்ல சாதாரண தமிழ் வார்த்தை இருக்க மூளையை கசக்கி "High Lights"-ஐ தமிழ்ப்  படுத்தி என்னைப் படுத்துகிறார்கள்.

               இன்று பலரும் தமிழில் பேச எழுத ஆசைப்படுகிறார்களே அன்றி, தமிழ் பேச எழுத முயற்சிப்பதில்லை. தயவுசெய்து தமிழைக் கற்றுக்கொண்டு தமிழை எழுத முயலுங்கள். தமிழ் சாகாது என்பது நிதர்சனம். ஆனால் தமிழை சிதைக்காமல் இருங்கள். முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த நல்ல தமிழ்ப் படைப்புகளை படியுங்கள். நடிகர்களைக் கூட்டி கவர்ச்சி விழா எடுத்து, தன் படைப்புகளை விற்கும் எழுத்தாளனையும் பதிப்பகத்தையும் புறக்கணியுங்கள்.

கருத்துகள் இல்லை: